செழிப்பு

RevHarris

Rev. J. Harris

“தமது ஊழியக்காரருடைய செழிப்பை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்,” சங் 35:27

     தமிழ் வேதாகமத்தில் தமது ஊழியக்காரருடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று வருகிறது. சரியான மொழிபெயர்ப்பை நான் தந்துள்ளேன். இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்ட தேவனுடைய மக்கள் எல்லாரும் தேவனுடைய ஊழியக்காரர் என்பதில் சந்தேகம் இல்லை. இவர்கள் செழித்து வாழுவதை தேவன் விரும்புகிறார். ஏனென்றால் தேவன் செழித்து வாழுகிறார். அவர் நம் தகப்பன், நாம் அவருடைய பிள்ளைகள், அவர் செழித்து வாழும் போது நாம் வறண்டு வாழ்வது பொருந்தாது. ஏனென்றால் அவர் இருக்கிற பிரகாரமாக நாமும் இவுலகில் இருக்கிறோம் என்று வேதம் கூறுகிறது. (1 யோ 4:17)  நாம் அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருகிறோம், நாம் இரட்சிக்கப்பட்டபோது இந்த காரியம் நடந்தது.

     “நானே வாசல் என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால் அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறமும் மேய்ச்சலை கண்டடைவான்” (யோ 10:9) ஆண்டவர் இயேசுவின் வாயிலிருந்து புறப்பட்ட வாசகத்தை இங்கே காண்கிறோம். ஒருவன் இரட்சிக்கப்படும் போது உள்ளும் புறமும் மேய்ச்சலை கண்டடைவான் என்று இயேசு சொன்னார். முதலாவது உள்ளே மேய்ச்சல், இரண்டாவது வெளியே மேய்ச்சல். உள்ளான மனிதனில் ஏற்படுகிற மாற்றங்கள் முதலிடத்தில் இருக்கிறது. அதாவது, நம்முடைய சுபாவத்தில் ஏற்படுகிற மாற்றங்கள் முதலிடம் பெறுகின்றன. மனிதன் கிறிஸ்துவை போல மாறுவதே இந்த இரட்சிப்பின் நோக்கம். கிறிஸ்தவன் என்ற பதம், கிறிஸ்து அவன் என்ற அர்த்தம் உள்ளதாக இருக்கிறது. பாவ மன்னிப்பும், பரலோகமும் மாத்திரம்தான் அநேகருடைய மனதில் இருக்கிறது. பூலோக வாழ்க்கைக்கு அவர்கள் அதிகம் முக்கியத்துவம் தரவில்லை. ஆனால் அவர் இருக்கிற பிரகாரமாக நாம் இந்த உலகத்தில் இருக்கிறோம் என்று யோவான் கூறுகிறார். இந்த உலக வாழ்க்கை தேவனுடைய பார்வையில் முக்கியம் பெற்றிருக்கிறது. நாம் அதை முக்கியம் என்று எண்ண வேண்டும். உள்ளே தேவனைப் போல மாறுவது போல வெளியேயும் தேவனை போல மாற வேண்டும். ஏனென்றால் அவன் உள்ளும் புறம்பும் மேய்ச்சலை கண்டடைவான் என்று தேவன் சொன்னார். வெளியே தேவனை போல செழித்திருப்பது தேவனுடைய விருப்பமாக இருக்கிறது. தமது ஊழியக்காரருடைய செழிப்பை தேவன் விரும்புகிறார். அது போதும் நமக்கு. நாம் செழித்திருப்பதை மனிதர் பலர் விரும்பாமல் இருக்கலாம். அது முக்கியம் இல்லை. ஏனென்றால் எந்த மனிதனும் நமக்காக சிலுவையில் தொங்கவில்லை, எந்த மனிதனும் நம்முடைய தரித்திரத்தை சிலுவையில் ஏற்று கொள்ளவில்லை. எந்த மனிதனும் நம்முடைய தரிதிரத்துக்காக சிலுவையில் தண்டிக்கப்படவில்லை. இயேசு அதை செய்தார். வேதம் இப்படி சொல்லுகிறது. “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே அவர் ஐசுவர்யமுள்ளவராயிருந்தும் நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்கள் ஆகும்படிக்கு அவர் உங்கள் நிமித்தம் தரித்திரர் ஆனாரே” 2 கொரி 8:9

     நான் ஐசுவரியவானாக இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புவதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் அதற்காக அவர் கிரயம் கொடுத்திருக்கிறார். ஆண்டவரே உம்முடைய விருப்பத்துக்காக நன்றி. உமக்கு மகிமையை செலுத்துகிறேன் என்று நான் சொல்வதே சரி. இதைத்தான் சங்கீதக்காரன் சொல்கிறான், தமது ஊழியக்காரருடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள். நம்முடைய வாய் துதியினால் நிறைந்திருக்கும் போது அது ஐசுவரியத்துக்கு வழி வகுக்கும். தேவன் நம்மை செழிக்க வைப்பதற்கு பல வழிகள் அவரிடம் உண்டு. அதில் ஒரு சுவாரஸ்யமான வழியை பார்த்து கொண்டு வருகிறோம். பாவிகளுடைய ஆஸ்தியை தேவனுடைய பிள்ளைகளுக்கு தேவன் பண்டமாற்று செய்கின்ற வழியே அது. வேதத்தில் இதை தெளிவாய்க் காண்கிறோம். ஆபிரகாம் பஞ்சம் பிழைக்கப் போன எகிப்து தேசத்தில் இருந்து செல்வ சீமானாய் திரும்பி வந்தான். எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் ஆபிரகாமின் மனைவியாகிய சாராளை விரும்பினபடியால் அவள் நிமித்தம் ஆபிரகாமுக்கு தயை பாராட்டினான். “ஆபிரகாமுக்கு சாராள் நிமித்தம் பார்வோன் தயை பாராட்டினான், அவனுக்கு ஆடு மாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக்கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது.” ஆதி 12:16 கிடைத்தது என்ற பதத்தை கவனியுங்கள். ஆபிரகாம் வேர்வை சிந்தி சம்பாதித்தான் என்று வேதம் கூறவில்லை. ஆபிரகாமுக்கு கிடைத்தது, தேவன் கிடைக்க செய்தார். அவன் மடியில் கொட்டப்பட்டது. தேவன் கொட்டச்செய்தார். எகிப்து அந்த நாட்களில் தலைசிறந்த சாம்ராஜ்யமாக இருந்தது. அதின் இராஜா உலகிலயே செல்வந்தன். அவனுடைய சொத்தை தேவன் பிடுங்கி ஆபிரகாமுக்கு பண்டமாற்று செய்வதை காண்கிறோம். உங்களுக்கும் அப்படி செய்வார். ஏழையாக வயிறு பிழைக்கும்படி எகிப்துக்குப் போன ஆபிரகாமைப் பற்றி உடனடியாக வேதம் இப்படி சொல்லுகிறது. “ஆபிரகாம் மிருக ஜீவன்களும், வெள்ளியும், பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாக இருந்தான்.” ஆதி 13:2.

     ஆபிரகாமுடைய மனைவி சாராளை தொட பார்வோனுக்கு தேவன் இடம் கொடுக்க வில்லை. ஆகவே அவளை ஆபிரகாமிடத்தில் திருப்பி அனுப்பி விட்டான். அவன் கொடுத்த பொருட்களையோ பார்வோன் திருப்பி கேட்கவில்லை. எத்தனை ஆச்சரியம்? நான் கொடுத்ததையெல்லாம் எண்ணிமுதலில் என்னிடம் திருப்பி கொடு அப்புறம் உன் மனைவியை கூட்டிக்கொண்டு போ என்று சொல்லியிருக்கலாம். அதில் தவறு இல்லை. ஆனால் தேவன் ஒரு பயத்தை அவனில் உருவாக்கினார். இந்த பிரச்சனையிலிருந்து தப்புவித்தால் போதும் என்ற எண்ணத்தை தேவன் உண்டாக்கினார். இவ்விதமாக ஆபிரகாமை பணக்காரனாக்குவது தேவனுடைய திட்டமாக இருந்தது. அற்புதமான பண்டமாற்று ஆபிரகாம் இதை சம்பாதிக்க திட்டம் தீட்டவில்லை, உழைக்கவில்லை. இது தேவனுடைய ஆசீர்வாதம். ஆகவே தான் ஞானி இப்படி சொன்னான், “கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும். கர்த்தர் அதனோட வேதனையை கூட்டார்.” நீதி 10:22 சில ஆங்கில மொழிபெயர்ப்புகளில் கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும், கர்த்தர் அதனோட வேர்வையை கூட்டார்.” என்று வாசிக்கிறோம். ஆம்! மனிதனுடைய அளவுகடந்த உழைப்பு அல்ல. தேவனுடைய கிருபையே ஐசுவரியத்துக்கு அஸ்திபாரம். மனிதனுடைய வேர்வை அல்ல தேவனுடைய அருள். அதுவே செழிப்புக்கு அஸ்திபாரம். வேர்வை ஆசீர்வாதத்தின் அடையாளம் அல்ல. அது சாபத்தின் அடையாளம். ஆதாம் சபிக்கப்பட்ட பொழுது வேர்வை அவன் பங்காக மாறிற்று. அது வரை ஆதாம், வேலை செய்தான். ஆனால் வேர்வை சிந்தவில்லை. ஏனென்றால் தேவனுடைய ஆசீர்வாதத்தில் அவன் வாழ்ந்தான். “பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும், நீ உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்.” ஆதி 3:19

     மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து ஐசுவரியத்தைச் சம்பாதிப்பது மனிதனுடைய வழி. ஆனால் ஐசுவரிய தேவன் மேல் நம்பிக்கை வைத்து செழிப்பது, தேவன் வைத்த வழி. ஆபிரகாமின் வாழ்வில் நடந்த இந்த சம்பவம் நமக்கு மாதிரியாக எழுதப்பட்டுள்ளது. ஆபிரகாமின் தேவன் என்னுடைய தேவன். ஆபிரகாமுக்கு எதை செய்தாரோ அதை எனக்கு செய்வார். நான் ஜெபித்து, உபவாசித்து ஐசுவரியவான் ஆவேன் என்றார் ஒருவர், ஜெபித்து உபவாசித்து அல்ல, ஆபிரகாமின் தேவனை நம்பி நான் ஐசுவரியவான் ஆவேன், இதுவே தேவனுடைய வழியாக இருக்கிறது. எல்லாப் புகழும் தேவனுக்குப் போய் சேரவேண்டும். ஆபிரகாமை ஐசுவரியவானாக்கினது அவன் ஜெபம் அல்ல, அவனை ஐசுவரியவானாக்கினது அவனுடைய தேவன். ஆம்! அவனுடைய தேவன் என்னுடைய தேவன். அவர் ஆபிரகாமுக்கு செய்ததை எனக்கு செய்வார். ஆபிரகாம் தன் மனைவியை தன்னுடைய தங்கை என்று சொன்னான். ஆம்! பார்வோனின் படைபலத்தை கண்டு பயந்து அப்படிச் சொன்னான். அவனுடைய தவறுகள் மத்தியில் தேவன் அவனை ஐசுவரியவான் ஆக்கினார். என்னுடைய தவறுகள் மத்தியில் அவர் என்னை ஐசுவரியவானாக்குவர். ஏன்? அவர் மாறாதவர். “நான் கர்த்தர் நான் மாறாதவர்” என்று அவர் சொல்லியிருக்கிறார். மல் 3:6. ஆபிரகாம் பிரயாணம்பண்ணி போன இடமெல்லாம் தேவனுக்கு பலிபீடத்தைக் கட்டினான். ஏன்? அவன் மேன்மை பாராட்டுவதற்கு ஒன்று இருந்தது. அது யேகோவா தேவனும் அவருடைய ஆசீர்வாதமுமே. மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக் குறித்தே மேன்மை பாராட்ட வீண்டும் என்று வேதம் சொல்லுகிறது. பார்வோனுடைய செல்வத்தை ஆபிரகாமுக்கு பண்டமாற்று செய்தது மாத்திரமல்ல, ஆபிரகாமின் பிள்ளைகளாகிய இஸ்ரவேலருக்கு எகிப்தியரின் செல்வங்களை அவர் பண்டமாற்று செய்தார். என்று வேதம் சொல்லுகிறது. இது அதை விட மிகப் பெரிய பண்டமாற்று. ஏனெனில் அன்று ஒரு மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டான், இன்று முப்பது லட்சம் இஸ்ரவேலர் ஒட்டு மொத்தமாக ஆசீர்வதிக்கப்பட்டார்கள். ஆட்டுக்குட்டியின் இரத்ததினால் அவர்கள் எகிப்திலிருந்து விடுதலையாக்கப்பட்ட அன்று எகிப்தியரிடமிருந்து, பொன்னையும், விலையுயர்ந்த வஸ்திரங்களையும் கேட்டு வாங்கும்படி தேவனே கட்டளை கொடுத்தார். கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகள் எகிப்தியர் இஸ்ரவேலரை கொடுமையாய் வேலை வாங்கினார்கள். அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள். வேலைக்குரிய சம்பளம் கொடுக்கப்படவில்லை. அநியாமாய் அது தடுத்து நிறுத்தப்பட்டது. தேவன் பார்த்துக்கொண்டே இருந்தார். வட்டியும் முதலுமாக இஸ்ரவேலருடைய பணத்தை எகிப்தியரின் கையிலிருந்து பலவந்தமாக பிடுங்க திட்டமிட்டார். அதை இஸ்ரவேலருக்கு கொடுக்க திட்டமிட்டார். அதற்காகவே தலைப்பிள்ளை சங்காரம் நடந்தது. இப்போது எகிப்தியர் பொன்னுடைமைகளையும், வெள்ளியுடைமைகளையும் பெரிதென்று எண்ணவில்லை. இஸ்ரவேலர் எகிப்தை விட்டு போனால் போதும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். இஸ்ரவேலர் ஏதையெல்லாம் கேட்டார்களோ அதையெல்லாம் எகிப்தியர் கொடுத்தார்கள். எந்தத் தடையுமில்லை. இந்த ஆபரணங்களையெல்லாம் செய்வதற்கு இஸ்ரவேலர் வேர்வை சிந்தவில்லை. வேர்வையில்லாமல் எல்லாவற்றையும் இலவசமாக வாங்கி அணிந்து கொண்டார்கள். என்ன பாக்கியம்? தங்களுடைய குமாரத்திகளுக்கு மாத்திரம் அல்ல, குமாரருக்கும் பொன்னாபரணங்களை தரிப்பித்து மகிழ்ந்தார்கள். தேவனே அப்படிச் செய்யச்சொன்னார். “நீங்கள் போகும்போது வெறுமையைப் போவதில்லை. ஒவ்வொரு ஸ்திரீயும் தன் அயலகத்தாளிடத்தில் வெள்ளி உடமைகளையும், பொன் உடமைகளையும், வஸ்திரங்களையும் கேட்டு வாங்குவாள். அவைகளை உங்கள் குமாரருக்கும், உங்கள் குமாரத்திகளுக்கும் தரிப்பியுங்கள்.” யாத் 3:22

     இன்று அநேக பரிசுத்தவான்கள் பொன்னைத் தொடலாமா கூடாதா என்று ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்கும்போது இங்கு தேவனே அதை அணியச்சொல்லி பாடம் கற்பிப்பதைக் காண்கிறோம். குமாரருக்கு முதலாவது அணியுங்கள், இரண்டாவது குமாரத்திகளுக்கும் அணியுங்கள். தேவன் தரும் ஆசீர்வாதத்தை குடும்பமாக அனுபவித்து தேவனை கனப்படுத்துங்கள். “இஸ்ரவேலின் கோத்திரங்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார்.” சங் 105:37. இஸ்ரவேலர் வெள்ளியோடும் பொன்னோடும் புறப்பட்டுப் போனார்கள் என்று நாம் வாசிக்கவில்லை. தேவன் அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார் என்று வாசிக்கிறோம். இஸ்ரவேலின் தேவன் நம்முடைய தேவன், அவர் மாறாதவர். அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினவர் நம்மையும் அப்படியே புறப்பட வைக்கிறார். இதுவே அவருடைய மாறாத திட்டம். கிறிஸ்தவ பயணத்தில் செல்வமும் செழிப்பும், சேர்ந்தே இருக்கிறது. கிறிஸ்தவன் என்றால் அவன் ஏழையாகத்தான் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் அவன் உண்மை கிறிஸ்தவன் அல்ல என்று அநேகர் நம்புகிறார்கள். இது வேத போதனை அல்ல. இது கிறிஸ்தவ மத போதனை. உண்மை கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல. இது ஜீவ தேவனைப் பின்பற்றுகிற ஒரு மார்க்கம். இந்த மார்க்கத்தின் வழிகாட்டி வேதம் மாத்திரமே. வேதம் மாத்திரமே தேவனை நமக்கு சரியாகக் காட்டுகிற ஒரு கண்ணாடியாக இருக்கிறது. மத போதனைகள் மனிதனால் கொடுக்கப்பட்டவை, அவை நமக்கு வாழ்வை கொண்டு வராது. நம்மைப் படைத்த தேவன் நமக்கு வாழ்வைத் தருகிறார். வேதம் வாழ்வு தரும் புத்தகமாக இருக்கிறது. தேவன் பாவிகளுடைய ஆஸ்திகளை நீதிமான்களுக்கு பண்டமாற்று செய்கிறார் என்பதற்கு இன்னொரு ஆதாரத்தை வேதத்திலிருந்து காண்போம். மோசே எகிப்து தேசத்தில் பிறந்தான். மோசேயுடைய தகப்பன் பெயர் அம்ராம். அவனுடைய தாயின் பெயர் யோசபேத் (எண் 26:59). அவன் பிறந்த நாட்கள் எகிப்தியர் இஸ்ரவேலரைக் கொடுமையாய் நடத்தின காலம். இஸ்ரவேலர் பெருகக்கூடாது என்பதற்கு இஸ்ரவேலில் பிறக்கும் ஆண் பிள்ளைகளை எகிப்தின் ராஜா நீலநதிக்குள் எறிந்து விடும்படி கட்டளை கொடுத்தான். ஆகவே இஸ்ரவேலின் பலநூறு ஆண் பிள்ளைகள் அனுதினமும் நீலநதிக்குள் மூழ்கி மரித்துப் போனார்கள். ஆனால் மோசேக்கு தேவனுடைய ஆசீர்வாதம் கிடைத்தது. மோசே என்றால் தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்டவன் என்று பொருள். எந்த நீலநதி ஆயிரமான ஆண் பிள்ளைகளை விழுங்கிப்போட்டதோ, அதே நீலநதி மோசேயின் பேழையை சுமந்து சென்றது. மோசேயை நாணல் பேழைக்குள் வைத்து யோசபேத் மிதக்க விட்டாள். பேழை பார்வோனுடைய குமாரத்தி அருகில் மிதந்து சென்றது. நீலநதியில் ஸ்நானம் பண்ணப்போனவள் பேழையிலே ஒரு இஸ்ரவேலின் ஆண் குழந்தையை கண்டாள். இரக்கமுற்றாள். தகப்பனுடைய கட்டளையையும் மீறி குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச் சென்றாள். அந்தக் குழந்தையை தத்தெடுத்து அரண்மனையில் வளர்க்க ஆரம்பித்தாள். மோசேயின் தாய் யோசபேத்தே பிள்ளையை வளர்த்துக் கொடுக்கும் பொறுப்பில் இருத்தப்பட்டாள். எல்லா ஆண் குழந்தைகளும் நீலநதியில் மரித்துக் கொண்டிருக்கும்போது, மோசேயின் வீட்டுக்கு அரண்மனையிலிருந்து சோப்பும், பவுடரும், வாசனை எண்ணெயும், உயர்தரமான ஆடைகளும் அநுதினம் வந்து கொண்டே இருந்தது. பார்வோனின் அரண்மனையில் உள்ள வகை வகையான ஆகாரங்கள் மோசேயின் தாய் யோசபேத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது கர்த்தராலே ஆயிற்று, நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்ற வசனம் தான் ஞாபகம் வருகிறது. பார்வோனுடைய செல்வம் ஏழை மோசேக்கு பண்டமாற்று செய்யப்படுவதை இங்கே காண்கிறோம். தேவரீர் சகலதையும் செய்ய வல்லவர். தேவரீர் செய்ய நினைத்தது தடைபடாது என்று வேதம் கூறுகிறது. மனிதராலே இது கூடாதது தான். தேவனாலே எல்லாம் கூடும் என்று இயேசு சொன்னார். நண்பர்களே! மோசேயின் தேவன் நம்முடையவர், இப்படிப்பட்ட அற்புத பண பரிமாற்றங்களை உங்களுக்கு செய்ய அவர் விரும்புகிறார். நம்புங்கள், எதிர்பாருங்கள். தேவன் அப்படியே செய்து உங்கள் மூலம் மகிமைப்படுவார். ஆமென்.

Post a comment

Book your tickets