28.03.2021 | சுகம் ஒரு சுதந்தரம் – 8 | Rev. Solomon

இயேசு மாம்சத்திலே வெளிப்பட்ட தேவன் என்று வேதம் சொல்லுகிறது. இது ஒரு ஆச்சரியமான காரியம். ஒரு மனிதன் பூச்சியாக மாற முடியுமா? அது மிகவும் கடினம். அப்படியே மாறினால் அது மிகப்பெரிய அதிசயம், ஆச்சரியம். அதைப் பார்க்கிலும் கடினமான விஷயம் தேவன் மனிதனாக பிறப்பதாகும். கட்டுக்கடங்காத தேவன் ஒரு எல்லைக்குட்பட்ட மனிதனாக பிறப்பது என்பது ஆச்சரியமான, விந்தையான ஒரு காரியம். ஆனால் இது உண்மை. தேவதூதர்கள் எல்லோரும் இயேசுவின் பிறப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் என்று வேதம் சொல்லுகிறது. ஏனென்றால் அவர் வானத்திலும் பூமியிலும் பெரியவர் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் இவ்வளவு பெரிய தேவன் தன்னைத் தாழ்த்தி ஒரு மனிதனாக பூமியில் பிறக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டார்கள். அது அவர்களுக்குப் புரியவில்லை. இயேசு பூமியில் வர வேண்டுமானால் மாம்சமும் இரத்தமும் கொண்ட மனிதனாக பிறக்க வேண்டும். அப்போதுதான் கல்வாரி சிலுவையில் தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்த முடியும். மனிதர்களுக்காக பரிசுத்த இரத்தம் சிந்தப்படாவிட்டால் அவர்கள் பிசாசினுடைய கரத்திலிருந்தும், பாவத்திலிருந்தும் மீட்கப்பட முடியாது. “இரத்தஞ்சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு உண்டாகாது” என்று வேதம் சொல்லுகிறது. அந்த பரிசுத்த இரத்தத்தை சிந்துவதற்காகவே இயேசு மாம்சத்தயும் இரத்தத்தையும் உடைய மனிதனாக வந்தார். எதற்காக மனிதனை மீட்க வேண்டும்? ஏனென்றால் தேவன் மனிதன் மேல் இவ்வளவாய் அன்புகூர்ந்து நேசித்தார் என்று வேதம் சொல்லுகிறது. தேவன் மனிதனை நேசிக்கவில்லையென்றால் அவர் மனிதனாகவே வந்திருக்கமாட்டார். அவர் மனிதனை நேசித்தபடியால் தான் மனிதனாக வந்தார். கல்வாரி சிலுவையில் மரித்து மனிதனுடைய பாவங்களுக்கு முடிவு கட்டினார். மனிதனுடைய வீழ்ச்சிக்கு ஒரு தீர்வை ஏற்படுத்தினார். இன்றைக்கு இயேசுவுக்குள்ளே எல்லா நன்மைகளும் அடங்கியிருக்கிறது. பாவமன்னிப்பு, சமாதானம், சந்தோஷம், ஐசுவரியம், ஆரோக்கியம் என எல்லா ஆசீர்வாதங்களும் இயேசுவுக்குள்ளே இருக்கிறது. இதை ஒரு மனிதன் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டுமானால் இயேசுவை விசுவாசித்து அவரை அழைக்க வேண்டும். இன்றைக்கு மக்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு கடினமான வழிகளை தெரிந்துகொள்ளுகிறார்கள். ஆனால் தேவன் அதற்கான வழியை எளிதாக மாற்றி வைத்திருக்கிறார். மனிதன் செய்ய வேண்டியதெல்லாம், “இயேசுவே, என் உள்ளத்திற்குள் வாரும்” என்று உண்மையாய் சொல்லுவதுதான். அப்போது அவனுடைய வாழ்க்கை பலவித நன்மைகளாலும், ஆசீர்வாதங்களினாலும் நிரப்பப்படுகிறது. அநேகர் ஆண்டவரைப் பற்றி தவறான எண்ணம் உடையவர்களாய் இருக்கிறார்கள். கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, நியாயம் செய்கிற நியாயாதிபதி, அடிப்பவர், நொறுக்குபவர் என நினைக்கிறார்கள்.  ஆனால் கர்த்தர் பாவத்தை தண்டிக்கிறவர். இரட்சிக்கப்பட்டவர்கள் பாவத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள். அந்த தண்டனையெல்லாம் இயேசுவின்மேல் போய்விட்டது. நமக்காக இயேசு தண்டிக்கப்பட்டுவிட்டார். ஆகவே நாம் இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட பிறகு தேவன் நம்மை தண்டிப்பதில்லை. அவர் நம்மேல் அன்பாகவே இருக்கிறார். அவர் அன்பின் தகப்பனானபடியால் மனிதனை தன்னுடைய பிள்ளையாக படைத்தார். தேவன் மனிதனை அடிமையாகவோ, வேலைக்காரனாகவோ படைக்கவில்லை; தன்னுடைய பிள்ளையாகவே படைத்தார் என்று வேதம் சொல்லுகிறது.

  

“ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்” (லூக்கா 3:38).

 

வேதத்தில் நிறைய இடங்களில் வம்ச வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது. சிலர் இந்தப் பகுதியை வாசிப்பதில்லை. ஆனால் அப்படிப்பட்ட வம்ச வரலாற்றில் கூட ஆழமான கருத்துக்கள் புதைந்திருக்கிறது. தமிழில் மொழிபெயர்க்கும்போது, “ஆதாம் தேவனால் உண்டானவன்” என்று வருகிறது. ஆனால் ஆங்கிலத்தில், “ஆதாம் தேவனுடைய குமாரன்” என்றே வருகிறது. ஆதாம் தேவனுக்குள்ளே இருந்து வந்தான். தேவன் வானத்து நட்சத்திரங்களையும், சுடர்களையும் வானத்திலிருந்து உண்டாக்கினார். மீன்களை தண்ணீரிலிருந்து உண்டாக்கினார். மிருகங்களை தரையிலிருந்து, பூமியிலிருந்து படைத்தார். ஆனால் மனிதனை தமக்குள்ளிருந்து படைத்தார். அவர் மனிதனைப் படைக்கும்போது “நம்முடைய சாயலின்படியேயும், ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக” என்று சொல்லி, பூமியின் மண்ணினாலே ஒரு பொம்மையை செய்து, அவனுடைய நாசியிலே ஜீவசுவாசத்தை ஊதினார், மனிதன் ஜீவாத்துமாவானான். மனிதன் பிரதானமாக மாம்சம் இல்லை, அவன் ஆவி மனிதன். அந்த ஆவி மனிதன் தேவனுக்குள்ளே இருந்து வந்தான். அதனால் அவன் தேவனுடைய குமாரன். தேவன் அவனுக்கு முழு பூமியையும் சுதந்திரமாக கொடுத்தார். தேவன் தம்முடைய பிள்ளைகள் மிகவும் உச்சிதமான ஆசீர்வாதங்களை சுதந்தரித்து அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார். நாம் நன்றாயிருப்பதில் தான் அவர் பிரியப்படுகிறார்.

 

“பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்” (ஆதியாகமம் 1:28).

 

முழு பூமியையும் ஆளக்கூடிய அதிகாரத்தை தேவன் தம்முடைய குமாரனாகிய ஆதாமினிடத்தில் கொடுத்தார். ஆதாம் பூமியை சுதந்தரித்து ஆசீர்வாதமாய் வாழ வேண்டுமென்று தேவன் விரும்பினார். அதனால் தான் சங்கீதம் 115-இல் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது: “வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்கு கொடுத்தார்”. முழு பூமியின் ஆளுகையைக் கொடுத்ததுமட்டுமல்லாமல், அதைப் பண்படுத்தி, காத்துக்கொள் என்றும் சொன்னார். இங்கே ‘காத்துக்கொள்’ என்பது நன்மைகளைப் பறித்துக்கொண்டுப் போகிற பிசாசிடமிருந்து காத்துக்கொள் என்ற அர்த்தத்தில் வருகிறது. மேலும் தோட்டத்தின் நடுவே இருக்கும் நன்மை, தீமை அறியத்தக்க மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம் என்றும் தேவன் சொல்லியிருந்தார். ஆனால் ஆதாம் இந்த இரண்டையுமே கடைபிடிக்க தவறிவிட்டான். அவன் பிசாசை உள்ளே விட்டது மட்டுமல்லாமல், நன்மை, தீமை அறியத்தக்க கனியையும் புசித்தான். அந்த நேரத்திலேயே பூமியின் மீதிருந்த சுதந்திரத்தை, நல்வாழ்வை இழந்துபோனான். பிசாசு மனிதனுடைய சுதந்திரங்களை பறித்துக்கொண்டு அவனை வெறுமையாக்கிவிட்டான். ஆனால் நம்முடைய தேவன் மிகவும் நல்லவர். அவர் மனிதனுக்காக நிர்ணயம் செய்ததை ஒருநாளும் மாற்றமாட்டார். உதாரணமாக, யோனாவை எடுத்துக்கொள்வோம். தேவன் நினிவே பட்டணத்தின் மேல் அன்புகூர்ந்து அந்த மக்களை எச்சரிக்க யோனாவைத் தெரிந்தெடுத்தார். ஆனால் யோனா கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் தர்ஷீசுக்குப் போகிற கப்பலில் ஏறினான். அப்போது பெரிய புயல் காற்று வீசி யோனாவை கடலில் எறியும் சூழ்நிலை வந்தது. உடனே தேவன் ஒரு மீனைக் கொண்டு யோனாவைக் காப்பாற்றினார். பின்னர் யோனா மனந்திரும்பி மறுபடியும் நினிவேக்குச் சென்று கர்த்தருடைய வார்த்தைகளைச் சொன்னான். அங்கிருந்த மக்கள் எல்லோருமே மனந்திரும்பி ஆண்டவரை ஏற்றுக்கொண்டார்கள். இங்கே யோனா கீழ்ப்படியவில்லை என்றதும் ஆண்டவர் தனது திட்டத்தை கைவிடவில்லை. வேறு நபரை தெரிந்தெடுக்கவும் இல்லை. நம்முடைய ஆண்டவர் சொன்னால் சொன்னதுதான். அவர் தெரிந்தெடுத்த நபரைக் கொண்டு தாம் விரும்பின காரியத்தைச் செய்து முடிப்பார். அவர் வார்த்தையில் உண்மையுள்ளவர். மனிதனுடைய கையில் பூமியைக் கொடுத்து மனிதன் தான் இதை ஆள வேண்டும் என்று தேவன் ஏற்கனவே திட்டமிட்டுவிட்டார். இப்போது பிசாசு உள்ளே புகுந்துவிட்டான். ஆனால் தேவன் தனது திட்டத்தை மாற்றிக்கொள்ளவில்லை. மனிதன் கீழ்ப்படியாமல் போனதினால் அவனுக்கு எதுவும் வேண்டாம் என்று அவர் நினைக்கவில்லை. தேவனே மனிதனாக பிறந்து பிசாசிடமிருந்த அத்தனை அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் பறித்து மறுபடியும் மனிதனிடம் இயேசுவின் மூலமாக கொடுத்தார். அவர் சொன்னால் சொன்னதுதான். மனிதன் ஆளப்பிறந்தவன். இந்த அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் எடுத்துக்கொள்வது நம்முடைய பொறுப்பு.

 

“ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது” (மத்தேயு 5:3).

 

ஆவியிலே நான் ஒரு ஏழை என்று உணருகிற மனுஷன் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று வேதம் இங்கே சொல்லுகிறது. “எல்லாரும் பாவஞ்செய்து தேவமகிமையற்றவர்களானார்கள்” என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே எல்லோருமே ஆவியில் ஏழைகள் தான். ஒரு மனிதன் நான் ஒரு பாவி, ஆவியில் மிகவும் ஏழை, தேவனை விட்டு துண்டிக்கப்பட்டவன் என்றும், பாவத்தின் அடிமைத்தனத்தில் இருக்கிறேன் என்றும் உணர வேண்டும். பின்னர் தனது பாவத்திலிருந்து விடுதலையாக வேண்டும், பரிசுத்தமாய் வாழ வேண்டும், தேவனோடு இணைக்கப்பட வேண்டும் என்ற தன்னுடைய தேவைகளை உணரும்போதுதான் இரட்சிக்கப்படுகிறான். அவன்தான் பாக்கியவான் என்று வேதம் சொல்லுகிறது. பரலோக ராஜ்யம் அவர்களுடையதாய் இருக்கிறது. சிலர் பரலோக ராஜ்யம் என்றால் பரலோகம் என்று நினைக்கிறார்கள். பரலோகம் என்பது ஒரு தங்கப்பட்டணம். ஆனால் பரலோக ராஜ்யம் என்பது தேவனுடைய எல்லா ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்து, இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு வாழுகிற ஒரு வெற்றி வாழ்க்கை. இரட்சிக்கப்பட்டவர்களுக்கு இந்த பூமியிலே பரலோக ராஜ்யத்தின் ஆசீர்வாதங்கள் வைக்கப்பட்டிருக்கிறது என்று இயேசு தனது மலைப்பிரசங்கத்தின் முதல் பகுதியிலேயே சொன்னார்.

 

“சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” (மத்தேயு 5:5).

 

சாந்தகுணம் என்பது தேவனுடைய தெய்வீக சுபாவம். தேவன் மிகவும் உயர்ந்தவராயிருந்தும் தாழ்மையுள்ளவராய் இருக்கிறார். ஆகவேதான் இயேசு இவ்வாறு சொன்னார்: “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என்னிடத்தில் வந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்றார். கிறிஸ்தவ ஜீவியத்தின் அழைப்பே இயேசுவைப்போல தெய்வீக சுபாவத்தில் வளர்வதாகும். இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு போட்டி, பொறாமை, கசப்பு, வெறுப்பு, பகை என்ற பிசாசின் வாழ்க்கையை தெரிந்துகொண்டிருந்தோம். ஆனால் இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட பிறகு நாம் இயேசுவின் பிள்ளைகளாகி விட்டோம். அதனால் அவருடைய தெய்வீக சுபாவம் நமக்குள் வந்துவிட்டது. நாம் அதிலே வளரும்படி அவர் எதிர்பார்க்கிறார். அப்படி வளரும்போது நாம் எளிதாக தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வோம். சிலர், கர்த்தர் தான் நமக்கு ஆசீர்வாதங்களை வரவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. கர்த்தர் எப்போதும் நல்லவராகவும், ஆசீர்வதிக்கிறவராகவும் இருக்கிறார். நாம் தான் நம்முடைய எண்ணங்களை மாற்ற வேண்டும்.

வேதத்தில் செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபு, யோவான் இவர்களைப் பற்றி வாசிக்கிறோம். இவர்களுக்கு ‘இடிமுழக்கத்தின் சகோதரர்கள்’ என்று ஒரு பெயர் இருந்தது. இவர்கள் கொஞ்சம் முரடான சுபாவமுள்ளவர்களாக இருந்தனர். இவர்கள் கர்த்தரால் அழைக்கப்பட்டு இயேசுவின் சீஷர்களாகிவிட்டனர். ஒருமுறை இயேசு சமாரியா பட்டணத்திற்கு ஊழியம் செய்யப் போகும்போது அந்தப் பட்டணத்து மக்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவே இல்லை. எல்லோரும் இயேசுவுக்கு எதிர்த்து நின்றார்கள். உடனே இந்த யாக்கோபும், யோவானும் ஆண்டவரிடம், “எலியா செய்ததைப்போல வானத்திலிருந்து அக்கினியை இறக்கி, இவர்களை அழித்துப்போடும்படி நாங்கள் கட்டளையிட உமக்கு சித்தமா?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “நீங்கள் இன்ன ஆவி உடையவர்கள் என்பதை அறியாதிருக்கிறீர்களா?” என்று கேட்டார். இப்படிப்பட்ட முரடான ஆவியுடைய யாக்கோபும், யோவானும் பின் நாட்களில் இயேசுவை விசுவாசித்து, அவருடைய அன்பின் ஆவியை உடையவர்களாகி அன்பின் மக்களாக மாறிவிட்டார்கள்; தெய்வீக சுபாவமுடையவர்களாக மாறிவிட்டார்கள். யோவான் என்பவர் ஏழு சபைகளுக்கு தலைவராகவும், அநேகம் ஆயிர மக்களுக்குப் போதிக்கிற போதகனாகவும் மாறினார். அவருடைய வாழ்க்கை தெய்வீக சுபாவத்தால் நிரப்பப்பட்டவுடனே ஒரு பெரிய முன்னேற்றம் வந்தது. சாந்தகுணமும், தெய்வீக சுபாவமும் நம்முடைய வாழ்க்கையில் உயர்வைத் தருகிறது; கர்த்தர் வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை சுதந்தரிக்கவும் உதவி செய்கிறது.

 

“மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்” (எண்ணாகமம் 12:3).

 

“அப்படியே கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவுகிடைக்கும்படி செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரரின் பார்வைக்கும் ஜனங்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாயிருந்தான்” (யாத்திராகமம் 11:3).

 

இங்கே மோசே முதலில் சாந்தகுணமுடையவராய் இருந்தார் என்று வேதம் சொல்லுகிறது. பின்னர் எல்லோரைப் பார்க்கிலும் மிகவும் பெரியவராயிருந்தார் என்று சொல்லுகிறது. ஆகவே சாந்தகுணம் இருக்கும்போது நாம் மற்ற எல்லோரை விட பெரியவர்களாயிருப்போம்.

 

“கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்” (சங்கீதம் 147:6).

 

நாம் தாழ்மையுள்ளவர்களாக, சாந்தகுணமுள்ளவர்களாக இருக்கும்போது கர்த்தர் நம்மை உயர்த்துகிறார். பெருமை இருக்குமானால் அது கர்த்தருடைய ஆசீர்வாதங்களை நாம் சுதந்தரிப்பதற்கு தடையாக இருக்கிறது. வேதத்தில் லூக்கா 15-ஆம் அதிகாரத்தில இரண்டு குமாரர்களைப் பற்றிய கதை இருக்கிறது. ஒரு தகப்பனுக்கு மூத்த குமாரன், இளைய குமாரன் என இரண்டு பேர் இருந்தார்கள். தகப்பன் மிகவும் அன்புள்ளவராகவும், இரக்கமுள்ளவராகவும், பணக்காரராகவும் இருந்தார். ஒருநாள் இளையகுமாரன் தகப்பனிடம் சொத்தில் தன்னுடைய பங்கை கேட்டு வாங்கி, தன் இஷ்டத்திற்கு செலவு செய்து, நிறைய பாவங்கள் செய்து ஒரு பிச்சைக்காரனைப்போல மாறினான். பிறகு மனந்திரும்பி தகப்பனிடம் வந்து சேர்ந்தான். தகப்பன் அன்புள்ளம் கொண்டவர். ஆகவே அவனை மறுபடியும் தன் மகனாக ஏற்றுக்கொண்டார். இளையகுமாரனும் தகப்பனோடு சந்தோஷமாக வாழந்தான். ஆனால் இந்த மூத்த குமாரன் தகப்பனோடு இருந்தான். அவன் இளைய குமாரனைப்போல தகப்பனிடம் சொத்தைக் கேட்டு வாங்கி பாவ வாழ்க்கை வாழவில்லை. ஆனால் அவனுக்குள் தான் மட்டும் தான் நல்லவனாக இருக்கிறோம் என்ற பெருமை இருந்தது. தன்னுடைய தகப்பன் செய்தது தவறு, தன்னுடைய தம்பி செய்தது தவறு என எல்லோரையும் தவறாக நினைத்து, தன்னை மட்டும் நல்லவனாக பார்க்கும் பெருமையுடையவனாக இருந்தான். ஆனால் கடைசிவரை அவன் தகப்பனுடைய ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கவுமில்லை, அனுபவிக்கவுமில்லை. இதேபோல் கிறிஸ்தவ ஆவிக்குரிய ஜீவியமும் இருக்கிறது. நாம் பெருமைக்கு இடங்கொடுத்தால் ஒன்றையுமே பெற முடியாது.  

 

“அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான். அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்” (லூக்கா 15:28-30).

 

ஒரு மொழிபெயர்ப்பு இவ்வாறு சொல்லுகிறது: “எனக்காக ஒரு மெலிந்த ஆட்டுக்குட்டியைக்கூட அடிக்கவில்லை. ஆனால் வேசிகளிடத்தில் தன் ஆஸ்தியை விற்றுப்போட்ட இவனுக்காக கொழுத்தக் கன்றை அடிப்பித்தீரே” என்றான். இந்த மூத்த குமாரன் தான் மட்டுமே நல்லவன் என்ற பெருமை உடையவனாய் இருந்தான். “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார்” என்று வேதம் சொல்லுகிறது. அவன் தகப்பன் எவ்வளவு நல்லவராகவும், அன்புள்ளவராகவும் இருக்கிறார் என்று யோசிக்கவே இல்லை. இன்றைக்கும் அநேக கிறிஸ்தவ மக்கள் கர்த்தர் எவ்வளவு நல்லவர் என்பதை நினைக்காமல், நான் இவ்வளவு நேரம் ஜெபிக்கிறேன், உபவாசிக்கிறேன் என்ற பெருமை உடையவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் நாம் கர்த்தரைக் குறித்தே மேன்மைபாராட்ட வேண்டும். அப்போதுதான் நாம் சாந்தகுணமுள்ளவர்களாகவும், மனத்தாழ்மை உள்ளவர்களாகவும் இருக்க முடியும்; கர்த்தருடைய ஆசீர்வாதங்களை எளிதாக சுதந்தரிக்கவும் முடியும்.

 

“அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது” (லூக்கா 15:31).

 

இங்கே தகப்பன் தனது மகனிடம், “நீ கேட்கவில்லை, அதனால் நான் கொடுக்கவில்லை” என்று சொல்லவில்லை. மாறாக, “எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. நீ கேட்க வேண்டிய அவசியமே இல்லை, நீ எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்” என்று சொல்லுகிறார். ஆனால் அந்த மூத்த குமாரன் மிகவும் தற்பெருமையுடையவனாக இருந்ததால் எதையுமே எடுத்து அனுபவிக்கவில்லை. ஆனால் நாம் கர்த்தரைக் குறித்து மேன்மைபாராட்டுகிறவர்களாக இருக்க வேண்டும். கர்த்தர் மிகவும் நல்லவர், அன்புள்ளவர், இரக்கமுள்ளவர் என்ற எண்ணம் இருக்குமேயானால் ஆசீர்வாதங்களை நாம் எளிதாக சுதந்தரித்துக்கொள்ளலாம்.

 

“சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்” (சங்கீதம் 37:11).

 

சாந்தகுணம், தாழ்மை, தேவனைப் போன்ற தெய்வீக சுபாவம் இவையெல்லாம் நம்மை நிரப்பும்போது, நாம் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்போம் என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே நாம் மாம்சீகமான சுபாவங்களை விட்டுவிட வேண்டும். நாம் இயேசுவையே உயர்த்துகிறவர்களாக, மகிமைப்படுத்துகிறவர்களாக, சாந்தகுணமுள்ளவர்களாக இருக்கும்போது பூமியை சுதந்தரித்துக்கொள்வது எளிதாகிறது.

 

“இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” (ஆபகூக் 2:4).

 

இங்கே ‘அகங்காரம்’ என்ற வார்த்தை உள்ளது. ஆங்கிலத்தில் ‘பெருமை’ என்ற வார்த்தை வருகிறது. அதாவது பெருமையுள்ளவன் தன் எண்ணங்களில் சரியில்லாதவனாக இருக்கிறான். அவனுக்குள் சாந்தம், தாழ்மை இல்லை. ஆனால் நீதிமான் கர்த்தரை விசுவாசிக்கிறவன், தேவனுக்கு முன்பாக தன்னை தாழ்த்துகிறவன். அவன் பிழைத்திருப்பான். இப்படிப்பட்டவன் தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பது எளிதாகிறது.

 

“இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப் பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே” (ரோமர் 3:27).

 

விசுவாசப்பிரமாணத்தால் பெருமைபாராட்டல் நீக்கப்பட்டுவிட்டது. விசுவாசிக்கிற மனுஷன் வீணான பெருமைக்கு இடங்கொடுக்கவே மாட்டான். பெருமைக்கு இடங்கொடுக்கிற மனுஷனால் விசுவாசிக்கவே முடியாது. கவனித்தீர்களா? இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை. பெருமை இருந்தால் விசுவாசம் இருக்காது, விசுவாசம் இருந்தால் பெருமை இருக்காது. விசுவாசம் இருந்தால் தான் கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே விசுவாசத்தினால் பெருமைப்படுகிற அந்த சுபாவம் நீக்கப்பட்டிருக்கிறது. இப்போது வீணான பெருமைக்கு தேவனுடைய பிள்ளைகள் இடங்கொடுக்கவே கூடாது. அப்படி இடங்கொடுக்கும்போது ஆசீர்வாதங்கள் தடைபட்டுப்போகிறது. உங்களிடத்தில் பணம், பதவி, அந்தஸ்து இருக்கலாம், ஆனால் அதைப் பற்றிய பெருமை உங்களுக்கு இருக்கக்கூடாது. நீங்கள் ஜெபிக்கிறவர்களாக, உபவாசிக்கிறவர்களாக இருக்கலாம், ஆனால் அதைப் பற்றிய பெருமை உங்களுக்கு இருக்கக்கூடாது. தேவனுடைய பிள்ளைகள் சாந்தம் என்கிற தெய்வீக சுபாவத்தில் வளரும்போது, கர்த்தர் வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை எளிதாக பெற்றுக்கொள்ள முடிகிறது.

 

வேதத்தில் ஒரு பரிசேயனைப் பற்றின கதை இருக்கிறது. அவன் கர்த்தரிடத்தில் இவ்வாறு ஜெபித்தான்: “ஆண்டவரே, நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப் போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்” என்றான். அவன் கர்த்தரை ஸ்தோத்ததிரித்தானா? பிறகு அவன், “நான் வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன், என் சம்பாத்தியத்தில் எல்லாம் தசமபாகம் கொடுக்கிறேன்” என்றான். கர்த்தர் அவனிடம், “நீ என்னைக் குறித்து மேன்மைபாராட்டுகிறவனைப்போல் தெரியவில்லை. நீ எப்போதும் உன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறாய்” என்று சொல்லி அவனை நிராகரித்துவிட்டார். அங்கு இன்னொருவன் இருந்தான், அவன் ஆயக்காரன். அவன் பக்கத்திலேயே வரவில்லை. தேவனைப் பற்றி அவனுக்கு அவ்வளவு மரியாதை! அவன் தூரத்தில் நின்று, அவர் பரிசுத்த தேவன், நான் பாவத்தில் இருக்கிறேனே என்று சொல்லி தன் கண்களை வானத்துக்கு ஏறெடுக்கவில்லை. அவன் தன் மார்பிலே அடித்துக்கொண்டு, “ஆண்டவரே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்று சொல்லுகிறான். அவன் அப்படிச் சொன்ன மாத்திரத்தில், கர்த்தர், “அந்த பரிசேயன் அல்ல, இந்த ஆயக்காரனே நீதிமானாக்கப்பட்டவனாய் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்” என்று சொன்னார். ஆசீர்வாதத்தில் ஒரு உன்னதமான பகுதி என்னவென்றால் அது தேவனுடைய நீதி. அது இலவசமாய் கொடுக்கப்படுகிறது என்று வேதம் சொல்லுகிறது. அதை ஒரு ஆயக்காரன் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டான். அவன் அதை எப்படி வாங்கினான்? அவன் தேவசமுகத்தில் வந்து தன்னை தாழ்த்தி, அதை வாங்கிக்கொண்டுபோய் விட்டான். ஆனால் அந்த பரிசேயன் கர்த்தரிடம் வந்து பெருமைபாராட்டினான், அதனால் அவன் வெறுமையாகவே போய் விட்டான். அவனுக்கு நீதி கிடைக்கவில்லை. எவ்வளவு பரிதாபம்! அவன் உபவாசிக்கிறவன், தசமபாகம் கொடுக்கிறவன், ஆனால் ஒன்றையும் பெற்றுக்கொள்ளவில்லை. பெருமை எதையுமே பெற்றுக்கொள்ளவிடாது. ஆகவேதான் தேவனுடைய ஜனங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுகம் என்று வரும்போது கர்த்தருக்கு முன்பாக வெகுவாக தாழ்த்துகிறவர்களாக இருக்க வேண்டும். கர்த்தர் ஒன்றை சொன்னார் என்றால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுகிறவர்களாக, விசுவாசிக்கிறவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது எளிதில் சுகத்தைப் பெற்றுக்கொள்ளலாம். உங்களில் சிலர் வியாதியில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் தேவனுடைய வார்த்தையை சிறுபிள்ளை விசுவாசிப்பதைப்போல விசுவாசிக்க ஆரம்பித்தால் அற்புத சுகம் உங்களுடையதாக மாறும், வியாதிகள் மறைந்துபோகும்.

 

வேதத்தில் ஒரு நூற்றுக்கு அதிபதியைப் பற்றி வாசிக்கிறோம். அவன் ஆண்டவரிடம் தாழ்மையோடு வருகிறான். “ஆண்டவரே, நீர் என் வீட்டிற்கு வருவதற்கும் நான் பாத்திரனல்ல” என்று சொல்லி தாழ்மையோடு வருகிறான், சுகத்தை வாங்கிக்கொண்டு போய்விட்டான். இன்னொரு இராணுவ அதிகாரியைக் குறித்து காண்பிக்க விரும்புகிறேன். 2 இராஜாக்கள் 5:1-ஐ பாருங்கள்.           

 

 

“சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான்” (2 இராஜாக்கள் 5:1).

 

நாகமான் சீரிய ராஜாவின் படைத்தலைவன், பெரிய பராக்கிரமசாலி. ஆனால் அவன் குஷ்டரோகியாய் இருந்தான். இது எதைக் காண்பிக்கிறது? மனுஷனுடைய மேன்மைகள் பிசாசின் வல்லமைக்கு முன்பாக ஒன்றுமே கிடையாது. பிசாசின் வியாதியை மனுஷ பெலத்தை வைத்து மேற்கொள்ளவே முடியாது. பிசாசினுடைய வியாதியை விரட்டியடிக்க வேண்டுமென்றால், பிசாசைப் பார்க்கிலும் பெரியவருடைய உதவி நமக்கு வேண்டும். இயேசுவினுடைய உதவி இருந்தால் தான் நாம் பிசாசினுடைய வல்லமைகளை மேற்கொள்ள முடியும். வேதம் சொல்லுகிறது, “இயேசு நன்மை செய்கிறவராயும், பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்தார்”. நற்செய்தி என்னவென்றால், இயேசு நம்மோடுகூட இருக்கிறார். உலகத்தில் பிசாசின் சக்திகள், வியாதிகள் இருக்கின்றன. ஆனால் பிசாசின் எல்லா சக்திகளைப் பார்க்கிலும் வல்லமையுள்ள தேவன் இயேசு கிறிஸ்து நம்மோடுகூட இருக்கிறார். ஆகவேதான் 1 யோவான் 4:4 இப்படிச் சொல்லுகிறது: “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களுக்குள் இருக்கிறவர் பெரியவர்”. பெரியவர் கூட இருந்தார் என்றால் பிசாசின் வல்லமைகள் நம்மை மேற்கொள்ளாது. அவர் எல்லா வியாதிகளையும் விரட்டியடிக்க வல்லவர். அவருடைய உதவி நமக்கு இருக்கிற வரைக்கும் வியாதிகள் நம்மை மேற்கொள்ளவே முடியாது. இந்த நாகமான் பெரிய பராக்கிரமசாலி, ஆனால் குஷ்டரோகி. இவனுக்கு கூட கர்த்தருடைய தயவு கிடைக்கிறது. இவன் ஒரு அஞ்ஞானி, சூரிய தேவனை வணங்குகிறவன். ஆனால் இவனையும் தேவன் நேசிக்கிறார். அவர் எல்லார்மேலும் தயவுள்ளவர். நாகமானுடைய வீட்டில் இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பெண் வேலை செய்கிறாள். அந்தப் பெண் தன் எஜமாட்டியிடம், “என் ஆண்டவர் இஸ்ரவேல் தேசத்திற்கு போவாரானால் அங்கே இருக்கிற தீர்க்கதரிசி இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார், அப்போது இவர் சுத்தமாவார்” என்று சொல்லி ஒரு நற்செய்தியை சொல்லுகிறாள். தேவனுடைய மக்கள் சிறுபிள்ளைகளைப்போல நற்செய்தி சொல்லுகிறவர்களாய் இருக்க வேண்டும். நாகமான் அதைக் கேட்டவுடன் ஆவியானவர் அவனுக்குள் வேலை செய்துவிட்டார். இந்த சிறுபிள்ளை ஏதோ சொல்லுகிறாள் என்று அவன் உதாசீனப்படுத்தவில்லை. இவள் சொல்லுகிறதில் ஏதோ விவரம் இருக்கிறது என்று அதை நம்பி, ராஜாவிடம் அனுமதி கேட்டு, குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் ஏறி இஸ்ரவேல் தேசத்திற்கு வந்து எலிசாவின் வீட்டு வாசலில் நிற்கிறான். எலிசா உள்ளே இருக்கிறார். நாகமான் வந்திருக்கிறார் என்று தெரிந்த மாத்திரத்தில் எலிசா ஒரு செய்தியை அனுப்புகிறார். நாகமான் யோர்தானில் போய் ஏழு முறை மூழ்கினால், அவருடைய மாம்சம் சிறு பிள்ளையின் மாம்சத்தைப்போல மாறும்; அவர் குஷ்டரோகம் நீங்கி சுகமடைவார் என்று சொல்லி அனுப்புகிறார். இதைக் கேட்டவுடன் நாகமானுக்கு மிகுந்த கோபம் வந்தது. அவன் என்ன செய்கிறான் என்பதைக் கவனியுங்கள்.

 

“அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு, புறப்பட்டுப்போய்: அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன். நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, உக்கிரத்தோடே திரும்பிப் போனான்” (2 இராஜாக்கள் 5:11-12).

 

அவனுக்கு ஏன் கடுங்கோபமும் உக்கிரமும் வந்தது? ஏனென்றால் பெருமை. நான் எவ்வளவு பெரிய ஆள், சீரியாவின் படைத்தளபதி, பராக்கிரமசாலி, பணக்காரன், அதிகாரம் படைத்தவன். ஆனால் இந்த எலிசா வீட்டிற்குள் இருந்துகொண்டு, யோர்தானில் போய் ஏழு முறை ஸ்நானம்பண்ணு என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். அதைச் சொல்லுவதற்காவது அவர் வெளியே வர வேண்டாமா? ஆளை அனுப்பி அதை சொல்லி அனுப்புகிறாரே, யோர்தானில் ஓடுகிற அழுக்கு தண்ணீரில் முழுகுவதற்கு நான் வந்தேனா? என்று சொல்லி கடுங்கோபத்தோடு திரும்புகிறான். ஆனால் அவனோடுகூட இருந்தவர்கள் நல்லவர்கள். நாகமான் பெருமைக்காரனாக இருந்தாலும் அவர்கள் தாழ்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள், “தீர்க்கதரிசி உனக்கு பெரிய காரியத்தைச் சொல்லியிருந்தால் நீ அதைச் செய்வாய் அல்லவா? அவர் உனக்கு சிறிய காரியத்தைத்தானே சொன்னார். இதைச் செய்ய வேண்டியது அவசியமாய் இருக்கிறதே!” என்று சொல்லுகிறார்கள்.

 

“அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்” (2 இராஜாக்கள் 5:14).

 

அவன் பெருமையில் ஓடியிருந்தான் என்றால் குஷ்டரோகியாகவே இருந்திருப்பான். ஆனால் தேவனுக்கு முன்பாக தன்னை தாழ்த்தினான், தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தான். அதற்கு முன்பாக, “நான் எனக்குள் நினைத்திருந்தேன்” என்று சொன்னான். நாம் என்ன நினைக்கிறோம் என்பது முக்கியமல்ல. கர்த்தர் நமக்கு என்ன சொல்லுகிறார் என்பதுதான் முக்கியம். அவன் கர்த்தருடைய வார்த்தைக்கு தன்னை உட்படுத்துகிறான், தாழ்த்துகிறான், கீழ்ப்படிகிறான். அவனுடைய மாம்சம் சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறிவிட்டது. குஷ்டரோகம் நீங்குவது எவ்வளவு பெரிய காரியம்! தாழ்த்துகிற மனுஷன் அந்த பெரிய ஆசீர்வாதத்தை எளிதாக பெற்றுக்கொள்கிறான். பெரிய விசுவாசம் எங்கிருந்து வருகிறது? பெரிய தாழ்மையிலிருந்து வருகிறது, அப்போது வாழ்க்கையில் பெரிய காரியங்கள் நடக்கிறது.    

 

 

 

 

 

Book your tickets