கிறிஸ்துவுக்குள் ராஜாக்களாயிருக்கிறோம்

நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும், வல்லமையும், என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக (வெளிப்படுத்தல் 1:6).

பாவத்தினிமித்தம் பிசாசுக்கு அடிமைகளாயிருந்த நம்மை தேவன் இயேசுவின் இரத்தத்தினாலே பாவங்களற கழுவினது மட்டுமல்ல, நம்மை ராஜாக்களாகவும் ஆக்கியிருக்கிறார் என்று இந்த வசனத்திலே பார்க்கிறோம். மனிதன் ராஜாவைப்போல அரசாள வேண்டுமென்பது தேவனுடைய பூர்வகால திட்டம். ஆகவேதான் ஆதாமையும் ஏவாளையும் உண்டாக்கினபோது தேவன் இப்படிச் சொன்னார்:

பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் (ஆதியாகமம் 1:26-28).

 “ஆளக்கடவர்கள்”, “ஆண்டுகொள்ளுங்கள்” என்கிற பதங்களை கவனித்தீர்களா? யார் ஆளுகை செய்வார்கள்? அடிமைகளா? இல்லை! ராஜாக்கள் தான் ஆளுகை செய்வார்கள். தேவன் மனுக்குலத்தை அடிமைகளாக அல்ல, ஆளுகை செய்கிற ராஜாக்களாக உண்டாக்கினார். தேவன் ராஜாதி ராஜா. அவர் சர்வத்தையும் ஆளுகிறவர். அவர் மனிதனை அவரைப் போலவே ஆளுகை செய்கிற ஒரு குட்டி ராஜாவாக உண்டாக்கினார். ஆனால், மனிதன் பிசாசின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, பாவம் செய்தபோது ஆளுகையையும், ராஜரீகத்தையும், மகிமையையும் இழந்து ஒரு அடிமையாகி விட்டான் என்று வேதத்திலே பார்க்கிறோம். பிசாசு மனிதனை ஆண்டுகொண்டான். பாவமும், மரணமும், பிசாசின் தீமைகளும் மனிதனை ஆண்டுகொண்டது. பாவத்தையும், வியாதியையும், தரித்திரத்தையும் கீழ்ப்படுத்தி ஒரு ராஜாவைப்போல வாழ வேண்டியவன் அவைகளுக்கு அடிமைப்பட்டுப் போனான் என்பது வருந்தத்தக்க ஒரு உண்மை. கெம்பீரமாய் வாழ வேண்டியவன் பரிதாப நிலமைக்குள் விழுந்து விட்டான். ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் மனிதனை விழுந்துபோன நிலமையிலே விட்டு விடவில்லை. அவனை அதிலிருந்து தூக்கியெடுத்து மறுபடியும் அவனை ராஜாவாக்கும்படி அவரே இயேசு என்கிற பெயரிலே வந்து சிலுவையிலே பாடுபட்டார். இயேசுவின் சிலுவைப்பாடுகள் பாவத்திலே விழுந்து கிடக்கிற மனிதனை தூக்கியெடுத்து அவனை ராஜாவாக்குகிறது என்று வேதம் போதிக்கிறது.

இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ராஜாக்களாயிருக்கிறார்கள். ஒரு நாட்டுக்கு ஒரு ராஜா அல்லது எங்கோ ஒரு ராஜா என்றல்லாமல் இயேசுவை ஏற்றுக்கொண்ட எல்லாருமே ராஜாக்களாயிருக்கிறோம் என்று வேதம் திட்டவட்டமாய்ப் போதிக்கிறது. அப்போஸ்தலனாகிய பேதுரு என்ன சொல்லுகிறார் என்பதை கவனியுங்கள்.

 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள் (1 பேதுரு 2:9).

 தேவன், நம்மை ‘ராஜரீகமான ஆசாரியக்கூட்டம்’ என்று சொல்லுகிறார். நாம் பிச்சைக்கார கூட்டமல்ல. இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன் அந்தகார இருளிலே கிடந்தோம். பிசாசின் ராஜ்யத்திலே அவனுக்கு அடிமைகளாய் இருந்தோம். ஆனால் இப்பொழுதோ, ஒளியின் ராஜ்ஜியத்துக்குள்ளே வந்த நம்மை தேவன் ராஜரீகமான ஆசாரியக்கூட்டம் என்று அழைக்கிறார். அநேக தேவனுடைய மக்கள் தங்களை இப்படி எண்ணுகிறதில்லை. நான் குப்பை, தூசி, ஒன்றுக்கும் உதவாத பாவி என்று சொல்லுகிறார்கள். இதைத் தாழ்மை என்று நினைக்கிறார்கள். இது தாழ்மையல்ல, அறிவீனம். நாம் குப்பைகளல்ல, தூசியல்ல, பாவிகளல்ல. நாம் பிசாசின் கரத்திலிருந்து மீட்கப்பட்ட ஜனங்களாய், ராஜாக்களாய் இருக்கிறோம். இந்த எண்ணத்தை மனதிலே பதிக்க வேண்டும். இதுதான் உண்மையான தாழ்மை. தேவனுடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டு விசுவாசிப்பதுதான் உண்மையான தாழ்மை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இன்னும் அநேகர் தங்களை தேவனுக்கு முன்பாக பிச்சைக்காரர்களைப் போல உணருகிறார்கள். இதையும் தாழ்மை என்று நினைக்கிறார்கள். அவர்களுடைய ஜெபங்களெல்லாம் ‘கெஞ்சுகிறேன்’, ‘மன்றாடுகிறேன்’ என்று பிச்சைக் கேட்பது போலவே இருக்கிறது. இவர்கள் கர்த்தரிடத்தில் பெரிய காரியங்களைக் கேட்பதும் இல்லை, பெற்றுக் கொள்வதும் இல்லை. ஐநூறு ரூபாயையோ அல்லது ஆயிரம் ரூபாயையோ கேட்கிற பிச்சைக்காரர்களைப் பார்த்திருக்கிறீர்களா? ஒருபோதும் அவ்வளவு பெரிய தொகையை அவர்கள் கேட்க மாட்டார்கள். ஏனென்றால், அவர்களுடைய புத்தி பிச்சைக்கார புத்தி. அதேபோலத்தான் தேவனுக்கு முன்பாக பிச்சைக்காரர்களைப் போல உணருகிற தேவனுடைய பிள்ளைகளும் பெரிய காரியங்களைக் கேட்கவும் மாட்டார்கள்; அவைகளைப் பெற்று அனுபவிக்கவும் மாட்டார்கள். ஆனால், தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயிருக்கிறோம் என்கிற உணர்வுள்ளவர்கள் பெரிய நன்மைகளை தேவனிடத்தில் கேட்டு பெற்றுக் கொள்ளுகிறவர்களாய் இருப்பார்கள். நம் தேவன் பெரியவர், அவரிடத்தில் நாம் உரிமையோடு வந்து கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

அப்போஸ்தலனாகிய பவுல் நம்மைப் பற்றி என்ன சொல்லுகிறார் என்பதைக் கவனியுங்கள்.

 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார் (எபேசியர் 2:7).   

 ‘உட்கார செய்யப் போகிறார்’ என்று சொல்லாமல், ‘உட்காரவும் செய்தார்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அநேக தேவனுடைய மக்கள் எதிர்காலத்திலே பரலோகத்துக்குப் போன பிறகு இயேசுவோடுகூட சிங்காசனத்தில் வீற்றிருப்போம் என்று நம்புகிறார்கள். அது வேத வசனம் சொல்லுகிற சத்தியம்தான். ஆனால், இந்த வசனம் அதைப் பற்றியதல்ல. இந்த வசனம், நாம் இரட்சிக்கப்பட்ட அன்றைக்கே இயேசுவோடுகூட ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டு, அவரோடேகூட உன்னதங்களிலே உட்கார வைக்கப்பட்டிருக்கிறோம் என்று சொல்லுகிறது. சரீரப் பிரகாரமாக இந்த உலகத்திலே வாழுகிறோம். ஆனால், ஆவியிலே நாம் கிறிஸ்துவோடுகூட சிங்காசனத்திலே வீற்றிருக்கிறோம். இது எத்தனை பெரிய சிலாக்கியம் என்பதை எண்ணிப் பாருங்கள். பரலோகத்திலுள்ள தேவதூதர்கள் தேவ சமுகத்திலே நின்று கொண்டிருக்கிறார்கள். உட்காருவதற்கு அவர்களுக்கு அனுமதியில்லை என்று பார்க்கிறோம்.

 “உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள் (ஏசாயா 6:1-3).

 மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா? (எபிரெயர் 1:13).

 தேவதூதர்களில் ஒருவரையும் தமது சிங்காசனத்துக்கு அருகில் உட்காரும்படி தேவன் சொல்லவே இல்லை. தேவ சமுகத்திலே ஒரே ஒருவர்தான் உட்கார்ந்திருக்கிறார். அவர் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அதுமட்டுமல்ல, அவரோடேகூட நாமும் உட்கார வைக்கப்பட்டிருக்கிறோம். ராஜாவுக்கு இணையாக ராஜாக்கள் மாத்திரம்தான் உட்காருவார்கள். வேறு யாருக்கும் உட்காருவதற்கு அனுமதியில்லை. அப்படியானால் தேவன் நமக்கு எவ்வளவு பெரிய அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறார் என்பதை யோசித்துப் பாருங்கள். அவருக்கு இணையானவர்களாக இருக்கும்படி நம்மை தகுதிப்படுத்தி, உயர்ந்த ஸ்தானத்தையும், மதிப்பையும், மரியாதையையும் நமக்குத் தந்திருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கும்போது கர்த்தரை நாம் துதிக்காமல் அவருக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.

நம்முடைய முயற்சியினாலேயோ, திறமையினாலேயோ நாம் ராஜாக்களாக மாறவில்லை. தேவனுடைய கிருபை, அவர் நம்மேல் வைத்த அன்பு நம்மை ராஜாக்களாக்கியிருக்கிறது. இதைத்தான் சங்கீதக்காரன் இப்படிச் சொல்லுகிறான்:

 உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் (சங்கீதம் 8:3-6).

 சங்கீதக்காரன் மிகுந்த ஆச்சரியத்தோடு இதை எழுதுகிறான். அவன், வானங்களையும், சூரியனையும், சந்திரனையும் பார்க்கும்போது மனிதனுடைய உருவம் மிகவும் சிறியதாயிருக்கிறது. ஆனாலும் தேவன் மனிதனைத்தான் விசாரிக்கிறார். அவன் பேரிலேதான் நினைவாயிருக்கிறார். மனிதனை தேவன் விசேஷித்த ரீதியிலே நேசிக்கிறார். அவன் தேவனுடைய சிருஷ்டிப்பின் மகுடமாயிருக்கிறான். ஆகவே, அவர் அவனை தேவனிலும் சற்று சிறியவனாக உண்டாக்கினார். ‘தேவதூதரிலும் சற்றுச் சிறியவன்’ என்பது தவறு. ‘தேவனிலும் சற்றுச் சிறியவன்’ என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு. மனிதனுக்கு மேலே தேவன் ஒருவர் மாத்திரம்தான் இருக்கிறார். மற்றவையெல்லாம் மனிதனுக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவன் மனிதனை மகிமையினாலும், கனத்தினாலும் முடிசூட்டினார் என்று இங்கே வாசிக்கிறோம். யாருக்கு முடிசூட்டுவார்கள்? அடிமைகளுக்கா? எடுபிடி வேலை செய்கிறவர்களுக்கா? இல்லை! ராஜாக்களுக்குத்தான் முடிசூட்டுவார்கள். ஆம், கிறிஸ்துவுக்குள் நாம் ராஜாக்களாய் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நாம் அற்பமான காரியங்களுக்கு அடிமைப்படக்கூடாது. சிகரெட் பிடிப்பதும், மதுபானம் அருந்துவதும், போதைப் பொருட்களை உபயோகிப்பதும் ராஜாக்களாகிய நமக்கு தகுதியல்ல. அவைகளை மிதித்து ஜெயமுள்ள வாழ்க்கை வாழும்படி தேவன் விரும்புகிறார்.

ராஜாக்களைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்களுக்கு மதிப்பும், மரியாதையும், அந்தஸ்தும், அதிகாரமும் இருக்கிறது. அதுமட்டுமல்ல, ஐசுவரியமும், உலகப் பிரகாரமான நன்மைகளும் ஏராளம் இருக்கிறது. ஒன்றுமில்லாத ஒரு ராஜாவை நீங்கள் பார்க்கவே முடியாது. அதுபோலவே ஐசுவரியமும், கனமும், மகிமையும் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நன்மைகளை ஏற்கனவே நமக்குத் தந்து தேவன் தேவன் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். ஒரு ராஜா மண்வெட்டி பிடித்து வேலை செய்து சம்பாதிப்பது கிடையாது. அவன் பாடுபட்டு உழைப்பதினால் பணம் அவனுக்கு வருவது கிடையாது. அவனுக்கு ஐசுவரியம் சுதந்திரமாக வந்து கிடைக்கிறது. அவனுடைய அப்பா, தாத்தா, முப்பாட்டன் எல்லாருமே ராஜாக்கள். அவர்களெல்லாரும் சவதரித்த சொத்துக்களெல்லாம் இவனுக்கு சுதந்திரமாகக் கிடைக்கிறது. இவன் ராஜ குடும்பத்தில் பிறந்தபடியால் ராஜாவாயிருக்கிறான். மக்கள் ஓட்டுப்போட்டு இவனை ராஜாவாக தேர்ந்தெடுக்கவில்லை. இவன் பிறப்பாலேயே ஒரு ராஜா. அதேபோலத்தான் நாமும் இருக்கிறோம். நாம் தேவனுடைய குடும்பத்திலே அவருடைய பிள்ளைகளாக பிறந்திருக்கிறோம். இன்றைக்கு நாம் ராஜ குடும்பத்தில் இருக்கிறோம். நம் தேவன் வானத்துக்கும் பூமிக்கும் சொந்தக்காரராய் இருக்கிறார். நமக்கு அவர் ஐசுவரியசம்பண்ணராய் இருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. அவருடையதெல்லாம் நம்முடையது. நாம் தேவனுடைய சுதந்தரமும், கிறிஸ்துவுடனே உடன் சுதந்தரருமாய் இருக்கிறோம். நாம் பாடுபட்டு, இரத்த வேர்வை சிந்தி பிழைக்கும்படி தேவன் நம்மை அழைக்கவில்லை. அவர் நமக்கு ஏற்படுத்தி வைத்திருக்கிற ஐசுவரியத்தைச் சுதந்தரித்து, ராஜாக்களைப் போல வாழும்படி நம்மை அழைத்திருக்கிறார். அவருடைய ஆசீர்வாதம் நமக்கு ஐசுவரியத்தைத் தருகிறது. வேதனையில்லாத ஐசுவரியத்தை அனுபவித்து வாழ்வதுதான் நம்மைக் குறித்த அவருடைய சித்தமாயிருக்கிறது. இதையெல்லாம் புரிந்துகொண்டு தரித்திரத்தைக் கீழ்ப்படுத்தி ராஜாக்களைப் போல ஐசுவரியமாய் வாழ வேண்டியது நம்முடைய பொறுப்பு.

82 ஆம் சங்கீதத்திலே சொல்லப்பட்டிருக்கிற சத்தியத்தை கவனியுங்கள்.

தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

 நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்(சங்கீதம் 82:1, 6).

 அவரை ‘தேவன்’ என்றும் நம்மை ‘தேவர்கள்’ என்றும் இந்த வசனம் சொல்லுகிறதை கவனித்தீர்களா? அநேகர் இப்படிப்பட்ட சத்தியங்களை வாசிப்பதுமில்லை, தியானிப்பதுமில்லை. நான் ஒரு குப்பை, தூசி, ஆண்டவருடைய சமுகத்திலே நிற்க அருகதையற்றவன் என்று சொல்லுவதிலே தீவிரமாயிருக்கிறார்கள். அவர்களிடத்தில் போய், ‘நீங்கள் தேவர்களாயிருக்கிறீர்கள்’ என்று சொன்னால் நம்மை அந்திக்கிறிஸ்து என்று சொல்லி விடுவார்கள். அந்த அளவுக்கு ஆவிக்குரியவர்களுடைய மனதை பிசாசு திருக்கி வைத்திருக்கிறான். ஆனாலும் வேத வசனத்தின் சத்தியம் என்றைக்கும் மாறாததாகவே இருக்கிறது. ஒருமுறை இயேசு, “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்று சொன்னார். அதைக்கேட்ட பரிசேயர் அவரைக் கல்லெறியும்படி கல்லுகளை எடுத்துக் கொண்டார்கள். ஏன் கல்லெறிகிறீர்கள்? என்று கேட்டதற்கு, “நீ மனுஷனாயிருக்க உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாய் தேவதூஷணம் சொல்லுகிறபடியால் உன்மேல் கல்லெறிகிறோம்” என்றார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக, “தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேத வசனமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும் உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?” என்றார் (யோவான் 10:30-36).

இதன் மூலம் இயேசு என்ன சொல்ல வருகிறார்? நான் மட்டுமல்ல, தேவ வசனத்தைப் பெற்றுக்கொண்ட நீங்களும் தேவர்களாயிருக்கிறீர்கள் என்று சொல்லுகிறார். நீங்கள் தேவர்களாயிருக்கிறீர்கள் என்கிற வார்த்தை மாறுவதே இல்லை என்றும் இயேசு சொல்லுகிறார். ஆகவே, பரிசேயருடைய பிரச்சனை என்னவென்றால், தங்களை தேவர்களென்றும், உன்னதமானவரின் மக்களென்றும் அவர்கள் அறியவுமில்லை, விசுவாசிக்கவுமில்லை. அவர்களைப் போலவே இன்றைக்கும் அநேக பரிசேயர்கள் இருக்கிறார்கள். அவர்களிடத்திலே போய், ‘நாம் ராஜாக்களாய் இருக்கிறோம்’ என்று சொன்னால் நம்மையும் கல்லெறிய வந்துவிடுவார்கள். இது கள்ள உபதேசம் என்பார்கள். நான் சொல்லுகிறேன் இதுதான் நல்ல உபதேசம். ஏனென்றால், இது வேதம் போதிக்கிற சத்தியமாய் இருக்கிறது. நாம் ராஜாக்களாயிருக்கிறோம் என்கிற சத்தியத்தை ஆழமாய் அறிந்துகொள்ளும்போது நம்முடைய எண்ணங்கள் உயருகிறது. தாழ்வு மனப்பான்மை மறைந்து விடுகிறது. எண்ணங்கள் உயர்வடையும்போது வாழ்க்கையும் உயருகிறது. இப்படித்தான் தேவனுடைய மக்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

கடைசியாக, ராஜாக்களுடைய அதிகாரமும், வல்லமையும் அவர்களுடைய வாயின் வார்த்தையினாலேதான் வெளிப்படுகிறது.

ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு(பிரசங்கி 8:4).

 ராஜா ஒரு கால்வாயை அமைக்க விரும்பினால், அவர் மண்வெட்டியை தூக்கிக்கொண்டு போகமாட்டார். மாறாக, கால்வாயை வெட்டுங்கள் என்று கட்டளையிடுவார். அவர் கட்டளையிட்ட மாத்திரத்தில் வேலையாட்கள் துரிதமாய் செயல்பட்டு, ராஜாவின் கட்டளையை நிறைவேற்றுவார்கள். நம்முடைய தேவன் ராஜாதி ராஜா. அவர் தம்முடைய வார்த்தையின் அதிகாரத்தினாலேதான் தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றுகிறார். வேதம், “அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்” என்று சொல்லுகிறது. நம்மையும் தேவன் அவரைப் போலவே உண்டாக்கியிருக்கிறார். நாமும் நம்முடைய விருப்பங்கள் நிறைவேறும்படி அதிகாரம் நிறைந்த வார்த்தைகளைப் பேச வேண்டும். ஒருபோதும் சந்தேகத்தையும், அவிசுவாசத்தையும், அவநம்பிக்கையையும் உண்டாக்குகிற வார்த்தைகளைப் பேசக்கூடாது. நம்முடைய வார்த்தைகள் முற்போக்கானதாகவும் பேயையும், நோயையும், தரித்திரத்தையும் விரட்டியடிக்கிறதாகவும் இருக்க வேண்டும். மலைகளைப் பெயர்த்து தள்ளுகிற அதிகாரம் நிறைந்த வார்த்தைகளைப் பேச வேண்டும். தேவதூதர்களை கிரியை செய்ய வைக்கிற வார்த்தைகள், தேவனை மகிமைப்படுத்துகிற வார்த்தைகள், மற்றவர்களை கட்டியெழுப்புகிற வார்த்தைகள் மட்டுமே நம்முடைய வாயிலிருந்து புறப்பட வேண்டும். நாம் என்ன பேசுகிறோமோ அதுதான் நம்முடைய வாழ்க்கையிலே நிறைவேறும். ஏனென்றால், நாம் ராஜாக்களாய் இருக்கிறோம். ஆகவே, ராஜாக்களைப்போல சிந்தியுங்கள்; ராஜாக்களைப்போல செயல்படுங்கள்; ராஜாக்களைப்போல பேசுங்கள். ராஜ வாழ்க்கையை அனுபவிக்க கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

Comments(2)

  1. Miller Alixes says

    Wonderful revealation

  2. yosuva b says

    Amen.

Post a comment

Book your tickets